Tuesday, January 1, 2008

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஏமாறாமல் இருக்க துண்டு பிரசுரங்கள், கார்ட்டூன் படங்கள் மூலம் பிரசாரம்

சென்னை, ஜன.1-
வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பவர்களை குறிப்பாக, பெண்களை போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்கள் ஏமாறாமல் இருக்க துண்டு பிரசுரங்களை வெளியிட்டும், கார்ட்டூன் படங்கள் மூலமும் உரிய அறிவுரைகளை வழங்கி போலீசார் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
எச்சரிக்கை
வெளிநாட்டு வேலை மோகத்தில் ஏராளமானபேர் பணத்தை இழப்பதாக தினந்தோறும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் வந்து குவிகின்றன. வேலை மோகத்தில் வெளிநாடு செல்லும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படும் கொடூர சம்பவங்களும் நடப்பதாக தற்போது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசேஷ முயற்சியில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலை மோகத்தில் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருப்பதற்காக உரிய ஆலோசனைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை அச்சிட்டு, வெளியிட்டுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரங்கள் சென்னை நகரில் முக்கிய இடங்களில் குறிப்பாக, அனைத்து போலீஸ் நிலைய வாசல்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல ஏமாறுவதை தடுக்க கார்ட்டூன் படங்கள் வெளியிட்டும் போலீசார் பிரசாரம் செய்து வருகிறார்கள். இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் ஏமாறுவதை தடுக்கவும், கார்ட்டூன் படங்கள் போலீசாரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அடங்கிய கையடக்க புத்தகம் ஒன்றையும் போலீசார் தயாரித்துள்ளனர். சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள போலீஸ் அரங்கத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இந்த கையடக்க புத்தகங்களை போலீசார் இலவசமாக கொடுக்க உள்ளனர். கார்ட்டூன் படங்களும், துண்டு பிரசுர நோட்டீசுகளும் பொருட்காட்சி போலீஸ் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
20 அறிவுரைகள்
போலீசாரின் துண்டு பிரசுரத்தில் வெளிநாட்டு வேலை நாட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக 20 அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிவுரைகள் விவரம் வருமாறு:-
* வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா? அல்லது போலி நிறுவனமா? என்பதை, சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகத்தை 044-24891337 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்பு கொண்டோ, அல்லது நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.
* சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு போகக்கூடாது. * அரசு அனுமதி பெறாத வேலைவாய்ப்பு நிறுவனங்களை வேலைக்காக அணுகாதீர்கள். * வேலைக்கான வெளிநாட்டு விசாவை முன்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் போய் வாங்காதீர்கள்.
* வெளிநாட்டு வேலை தொடர்பான ஒப்பந்தத்தை நன்றாக படித்து பார்த்துக்கொள்ளுங்கள். * ஒப்பந்தம் பற்றிய ஜெராக்ஸ் நகல்களை கைவசம் வைத்திருங்கள். * விசாவை கையில் வாங்கும்வரை வேலைவாய்ப்புக்கான பணத்தை கொடுக்காதீர்கள். * விசாவில் உள்ள தேதியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
* வெளிநாட்டு வேலைக்கு போகும் முன்பு ஐ.ஆர்.டி.ஏ. மூலம் பதிவு செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். * ஆயுள் காப்பீடு எடுத்துக்கொண்டால் வெளிநாட்டு வேலையில் இருக்கும்போது, ஒருவேளை இறக்க நேரிட்டால் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டு தொகை கிடைக்கும். அதோடு வெளிநாட்டில் பிரச்சினை என்றால் நீங்கள் நாடு திரும்பி வருவதற்கு உரிய பணமும் கிடைக்கும்.
வங்கி கணக்கு
* வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு உங்கள் பெயரில் வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி கொள்ளுங்கள். * விசா உண்மையானதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சென்னை அசோக்நகரில் உள்ள இந்திய குடியுரிமை அலுவலக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். * வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.
* எந்தவொரு நிபந்தனை படிவத்திலோ, அல்லது வெள்ளை தாளிலோ யாரிடமும் கையெழுத்து போட்டுக் கொடுக்காதீர்கள். * நீங்கள் எந்த நாட்டிற்கு செல்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிந்து வைத்திருங்கள். * பிரச்சினை ஏற்பட்டால் உடனே இந்திய தூதரக அதிகாரியிடம் தைரியமாக புகார் கொடுங்கள். * அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட, கூடுதல் தொகையை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கேட்டால் கொடுக்காதீர்கள். * சப்-ஏஜெண்டுகளை நம்பி பணத்தை கொடுக்காதீர்கள்.
ஆன் லைன்
* ஆன் லைன் மற்றும் இன்டர்நெட்டில் வரும் வேலைவாய்ப்பு விவரங்களை உண்மை என்று நம்பி பணம் கட்டிவிடாதீர்கள். முழுமையாக சரிபார்த்து பணத்தை கட்டுங்கள். * போலி ஏஜெண்டுகள், போலி நிறுவனங்களிடம் ஏமாறும்பட்சத்தில் உடனடியாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 100 டெலிபோன் எண்ணிலோ அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிற்கு 23452317 என்ற தொலைபேசி எண்ணிலோ பேசி புகார் தெரிவிக்கலாம். உடனடியாக போலீசார் உதவிக்கு வருவார்கள்.
இவ்வாறு துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.