Tuesday, January 8, 2008

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.

வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான்

'' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். '' (9:36)

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் அநீதி அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய குற்றமாகும். அநீதி இழைப்பது எப்போதும் கூடாது. புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் தவறுகளுக்கு மிகப்பெரிய தண்டனை உண்டு. அல்லாஹ் சில இடங்களை , சில மனிதர்களை , சில நேரங்களை சில நாட்களை , சில மாதங்களை புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதப்படுத்துவதை நாமும் புனிதமாகக் கருதுவதும் அவற்றைப் பேணுவதும் அவசியம் ஆகும்.

மஸ்ஜிதுல் ஹராமில் தீங்கிழைக்க நாடுவதே குற்றமாகும் ( 22:25) என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஒப்ப புனிதம் மிக்க மாதங்களில் தீங்கிழைத்து விடுவதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளவேண்டும். இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் ''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)

'' இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப் படுத்துகின்றாரோ அது உள்ளத்தின் பயபக்தியைச் சார்ந்ததாகும் '' (22:30)

அல்லாஹ்வுக்கு விருப்பமானது

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ §ரைரா (ரழி)


அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

ஆஷ§ ரா நோன்பு

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷ § ரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள் , இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் , அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் , மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும் , தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று , பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி , முஸ்லிம், அஹ்மத்)

ஆஷ § ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ § ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் , '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும் '' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது (அதாவது தாசுஆ மற்றும் ஆஷ § ரா) நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம். கர்பலா சம்பவத்திற்கும் ஆஷ§ ரா தாசுஆ நோன்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிக. மேலும் அதனைத் தொடர்பு படுத்தி மவ்லிது ஓதுவதும், பஞ்சா எடுப்பதும் தீ மிதிப்பதும் ஊர்வலங்கள் செல்வதும் அநாச்சாரம் ஆகும். அநாச்சாரங்கள் நரகத்தின்பால் இட்டுச்செல்வாதாகும். இதனை நபித்தோழர்கள் செய்யவில்லை, இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அவை அல்லாஹ் புனிதப்படுத்தியவற்றைக் களங்கப்படுத்தும் செயலாகும்.


யா அல்லாஹ்! நன்மைகள் செய்யவும் உன்பால் நெருங்கவும் எங்களுக்கு அருள் பாலிப்பாயாக! உனக்கே எல்லாப்புகழும்!