செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.
இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.
ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.
மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.