Monday, March 10, 2008

தஸ்லிமா நஸ்ரின் விவகாரம்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய `த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்தப் பின்னணியில், கொல்கத்தாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் அவர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.
தஸ்லிமா தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவு செய்திருப்பதாக தஸ்லிமா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார்.
``வங்கதேசத்தில் 1980-களில் மதச்சார்பின்மையை இராணுவம் தூக்கியெறிந்ததை நினைவில் கொண்டு 2002-ம் ஆண்டு நான் எழுதிய த்விக்ஹோண்டிதோ’’ புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வரிகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது, இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.
இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்புவதற்கு வழிவகுக்கும் என்றார். தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.