Sunday, October 28, 2007

Zainul Hussain

குஜராத் கலவரம் : மோடிக்கு எதிராக 'தெகல்கா' ஆதாரம்

பாட்னா(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2007 ( 15:20 IST )
குஜராத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு ஏராளமான பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம், கோபத்தால் ஏற்பட்டதல்ல.முதலமைச்சர் மோடியின் ஒப்புதலோடு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சங்க் பரிவார் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களால் திட்டமிட்டே அந்த கலவரம் நடத்தப்பட்டது.இதற்கு (ரகசிய காமிராவால் படம்பிடிக்கப்பட்ட)மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் உள்ளது என பிரபல ஆங்கில வார இதழான 'தெகல்கா' நேற்று தெரிவித்திருந்தது. 'தெகல்கா' வின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், 'தெகல்கா' கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, அத்வானி மற்றும் மோடி ஆகிய இரண்டு பேரையுமே உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் என்பது தற்போது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது என்றார். மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்ததால், குஜராத் படுகொலைக்கு காரணமான குற்றச்சாட்டிலிருந்து அவர் (அத்வானி) தப்ப முடியாது.குஜராத் கலவரத்திற்கு மோடிக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அப்போது பிரதமராக இருந்தவருக்கும், உளதுறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் உள்ளது.மோடி மற்றும் அத்வானி ஆகிய இருவர் மீதும் உடனடியாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையிலடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே காரணத்திற்காக அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.