Monday, November 24, 2008

ஸலவாத்

ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1404 )

அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது?'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது? என்று கேட்டோம் ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்! அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸலவாத்தின் பொருள்:
இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்.
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1405 )

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் : 33:56)

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''(நபியாகிய) என்மீது ஒருவர் ஒரு தடவை ''ஸலவாத்'' கூறினால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ''ஸலவாத்'' கூறுகின்றான் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1397 )

அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், என்னிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும்'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1399 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''என் புதைகுழியை (கப்ரை) விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை வந்து சேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1401 )