சந்தேகமின்றி ஒரு விசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்க வேண்டும். அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான். உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 186)
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்.(அல்-குர்ஆன் 40: 60)
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை,
1. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். 2. அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.3. அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்.
ஆகவே வல்ல இறைவன் அல்லாஹுவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவன் நமது பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும் மன்னிப்பான்.
ஆனாலும், குறிப்பாக இங்கு கூறப்படும் நேரங்கள், நிலைகள், இடங்களில் பிரார்த்தனைகளை அதிகமாக செய்ய வேண்டும். அதேபோன்று பிரார்த்தனை செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால் அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வான்.
பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்
1. தூய மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2. பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
3. பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
4. அவசியத்தைக்கூறி பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. (அதாவது அல்லாஹ்விடம் ஒன்றிரண்டு முறைகள் பிரார்த்தனை செய்து, கேட்டது கிடைக்கவில்லையானால், அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு, பிரார்த்தனையை விட்டுவிடுவது கூடாது)
5. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.
6. சந்தோஷ நேரத்திலும், கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.
7. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது.
8. தன் குடும்பம், பொருள், பிள்ளை மற்றும் தனக்கும் கேடாக பிரார்த்தனை செய்யக் கூடாது.
9. சத்தத்தை மிகவும் உயர்த்தாமலும் மிகவும் குறைக்காமலும் அவ்விரண்டிற்கும் மத்தியில், நடு நிலையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
10. செய்த பாவத்தை மனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக பிழை பொறுப்புத் தேடி, அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை உளமாற ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
11. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
12. தெளிவான உள்ளத்தோடும் பயபக்தியோடும் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்து, அவனது தண்டனையிலிருந்து பயந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
13. மற்றவர்களின் பொருளை எடுத்து அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அந்தப் பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபின் அப்பாவத்திற்காக தவ்பாச் செய்ய வேண்டும்.
14. (பிரார்த்திற்கும் ஒவ்வொன்றையும்) மும்மூன்று தடவை பிரார்த்திக்க வேண்டும்.
15. கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
16. பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்.
17. முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும்.
18. ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். "துஆ" ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
19. முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். (இறைவா! எனது பாவங்களையும், இன்னாருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக என்று கேட்பது போல்).
20. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லது உயிரோடு வாழக்கூடிய நல்லவர்களிடம் (தனக்காக) பிரார்த்தனை செய்யும்படி கேட்டு (இஸ்லாத்தில் வஸீலா தேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இம்மூன்று வகைகளில் ஒன்றைக் கொண்டு) அல்லாஹுவிடம் உதவி (வஸீலா) தேடவேண்டும்.
21. உணவு, குடிபானங்கள் அணியும் ஆடை இவைகள் ஹலாலானவைகளாக இருக்க வேண்டும்.
22. பாவமான காரியங்களுக்காக அல்லது இரத்த உறவுகளை முறிப்பதற்காக பிரார்த்தனை செய்யக் கூடாது.
23. பிரார்த்தனை செய்பவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்
1. இரவின் நடுப்பகுதி
2. இரவில் கடைசி மூன்றாவது பகுதி
3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)
4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது
6. மழை பொழியும் போது
7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது
8. (தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது
9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை
10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை
11. தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை
12. பிரயாணியின் பிரார்த்தனை
13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை
14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
16. கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.
17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் பிரார்த்தனை.
18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் பிரார்த்தனை
19. நோன்பாளியின் பிரார்த்தனை.
20. நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் பிரார்த்தனை
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)
- மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ M.A